கடலூரில் தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்
கடலூரில் தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.;
தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25 முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கடலூரில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பால், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கண் மருத்துவர் கேசவன் வரவேற்றார்.
துண்டு பிரசுரம் வினியோகம்
கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது பாரதி சாலை வழியாக அரசு தலைமை மருத்துவமனை வரை சென்றது. பேரணியில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு கண்தானம் செய்வதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தபடியும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக கண்தானம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர் மற்றும் கண் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.