மனதைரியத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்: எதிர்காலத்தை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி இலக்கை திட்டமிட்டபடி அடையாலாம் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
மனதைரியத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள், எதிர்காலத்தை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி என்னும் இலக்கை திட்டமிட்டபடி அடையலாம் என்று பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான அறிவுரை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வில் தோல்வி அடைந்ததோ அல்லது மதிப்பெண் குறைவோ இவை உங்கள் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு வெற்றிப்படியாக அமையும். தோல்வி என்பது நிலையானதல்ல, அதிலும் நீங்கள் இப்போது இதை தோல்வியாக எண்ண வேண்டாம். வெற்றிக்கான அறிகுறியே என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் மனதளவில் சவாலாக எடுத்து தேர்ச்சி பெறாத பாடத்திற்கு தனிக்கவனம் செலுத்தி இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறும் சிறப்புத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். இத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அதற்கான பள்ளிகளின் பெயர் பட்டியல் அறிவிக்கப்படும். விருப்பமுள்ள மாணவ- மாணவிகள் பங்கேற்று நன்றாக படிக்கலாம்.
மனதைரியம்தோல்வியுற்றவர்கள் அனைவரும் சிறப்புத்தேர்வில் வெற்றி பெற்று விழுப்புரம் மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாவட்டம் என்பதை உருவாக்கிட வேண்டும். இன்றைய காலத்து பிள்ளைகள் அறிவுத்திறன் அதிகம் கொண்டவர்கள். எளிதாக எதையும் புரிந்துகொள்ளும் பக்குவம் கொண்ட நீங்கள் மனதைரியத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
தோல்வி என்றால் நமக்கு இனி வெற்றியே கிடையாது என்ற நிலைக்கு செல்லக்கூடாது. இன்றைய மாணவ சமுதாயம் மனதைரியத்தை உருவாக்கி தவறான சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் இருந்திட வேண்டும். இதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகளை கண்காணித்தாலே போதும், அவ்வப்போது சில அறிவுரைகளை வழங்குங்கள். பிள்ளைகளும் தங்கள் எதிர்காலத்தை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி என்னும் இலக்கை திட்டமிட்டபடி அடையலாம். அதற்கு பெற்றோர்களும், பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து அன்போடு, அரவணைப்போடு பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலைவாணி, காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.