தர்மபுரி மாவட்டத்தில் கருவில் பாலினம் கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கலெக்டர் சாந்தி எச்சரிக்கை

Update: 2023-01-27 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் பாலினம் கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் சாந்தி எச்சரித்தார்.

இளம் வயது திருமணம்

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, நல பணிகள் இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் எழிலரசி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவகுமார் வரவேற்றார்.

இந்த கருத்தரங்கில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் மாநில சராசரியை விட பாலின விகிதம் குறைவாகவும், உயர் வரிசை பிறப்பு மற்றும் இளம் வயது திருமணம் அதிகமாகவும் உள்ளது. இதனால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக காரணங்களினால் இளம் வயது திருமணம் அதிகமாக நடக்கிறது.

புகார் தெரிவிக்க வேண்டும்

இளம் வயதில் பெண்கள் திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுக்கும்போது அந்த குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டும், எடை குறைவாகவும் பிறக்கின்றன. பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றால் 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து இளம் வயது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

சட்டத்துக்கு புறம்பாக கருவில் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என தெரியும் நிலையில் கருக்கலைப்பு செய்வதை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு செயல்படுகிறது. கருவில் பாலினம் கண்டறிதல் மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற குற்றங்களை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மரக்கன்றுகள்

தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவதுறை, பள்ளி கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு இளம் வயது திருமணம், கருவில் பாலினம் கண்டறிதல், பெண் சிசுக்கொலை ஆகியவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.

முன்னதாக 2 பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு கலெக்டர் சாந்தி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி, பாராட்டினர்.

இந்த கருத்தரங்கில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ஜான்சிராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், தலைமை டாக்டர்கள் மலர்விழி, ரமேஷ் பாபு மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்