பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்:10 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரிந்தால் உள்ளக குழு அமைக்க வேண்டும்கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவு

Update: 2023-01-04 18:45 GMT

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க ஏதுவாக தனியார் நிறுவனங்களில் 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றினால் உள்ளக குழு அமைக்கப்பட வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டு உள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பது மற்றும் தடை செய்வது தொடர்பான சட்டத்தை நடைமுறைபடுத்துதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி பேசியதாவது:-

பெண்களின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பணியிடங்களில் பாலியல் வன்முறையற்ற பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம் பெண்கள் பணிபுரியும் இடங்களை, அவர்களுக்கான பாலியல் வன்முறையற்ற தளமாக உருவாக்குவதை நோக்கமாக கொண்டது.

உள்ளக குழு

நிறுவனங்களில் 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றினால் உள்ளக குழு அமைக்கப்பட வேண்டும். பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் பெண்கள், இச்சட்டத்தின் கீழ் அந்தந்த பணியிடங்களில் நியமிக்கப்பட்டு உள்ள உள்ளக குழுவில் புகார் செய்யலாம்.

உள்ளக குழுவின் உறுப்பினர்கள் பணிதளத்தின் தலைமை ஊழியர், மூத்த நிலையிலான ஒரு பெண் ஊழியர், ஊழியர்களிடையே இருந்து 2 பேருக்கு குறையாத உறுப்பினர்கள், அரசு சாரா அமைப்பு அல்லது சங்கங்களிலிருந்து ஒரு உறுப்பினர் ஆவார்.

சட்டப்படி நடவடிக்கை

10 தொழிலாளர்களுக்கு குறைவாக இருந்தால், பாலியல் துன்புறுத்தல் புகார்களை உள்ளூர் புகார் குழு வழியாக மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க ஏதுவாக புகார் பெட்டி அமைக்கப்பட வேண்டும். சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குள் எழுத்து பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். ஏற்புடைய சரியான காரணம் இருப்பின் கால தாமதமாக பெறப்பட்ட புகார் ஏற்கப்படும்.

பாதிக்கப்பட்ட நபர் மாற்றுத்திறனாளியாக இருக்கும் பட்சத்தில் அவரின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர் புகார் அளிக்கலாம். 90 நாட்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும். பணியிடங்களில் உள்ளகக் குழு அமைக்கப்பட்ட விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்