வன உயிரின வார விழா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

Update: 2022-11-30 18:45 GMT

வன உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்தும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2 முதல் 8-ந் தேதி வரை வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்பில் நமது பங்களிப்பு, வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம், மனித மற்றும் வன உயிரினங்களுக்கு இடையிலான சக வாழ்வு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டி மற்றும் வினாடி-வினா நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி வன பாதுகாவலர் அல்லிராஜ், வனச்சரக அலுவலர் பெருமாள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்