விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கேட்டு கொண்டார்.;

Update:2022-09-23 00:15 IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கேட்டு கொண்டார்.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடியில் இருந்து கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை வரை செல்லும் சர்வீஸ் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுவதால் இச்சாலையில் நடைபெறும் சிறு மற்றும் உயிரிழப்பு விபத்துகளை பெருமளவு தடுக்க முடியும்.

கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் அபாயகரமாக பிரதான சாலையை கடப்பதால், விபத்துகளை தடுக்கும் பொருட்டு தடுப்பு சுவரில் உள்ள இடைவெளியை முழுவதுமாக அடைக்க வேண்டும்.

உயர் கோபுர மின்விளக்கு

கிருஷ்ணகிரி முதல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் (மோட்டூர் அருகே) சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், இரவு நேரங்களில் பிரதான சாலையில் செல்லும் வாகனங்கள் மூலம் விபத்து ஏற்படாத வண்ணம் சாலை ஓரம் ஒளிரும் பட்டைகள் ஒட்டிய தற்காலிக தடுப்பணைகளை சாலை நெடுகிலும் அமைக்க வேண்டும்.

மேலும், அவதானப்பட்டி சிறுவர் பூங்கா எதிரில் பிரதான சாலையில் செல்லும் வாகனங்களின் வேகத்தினை குறைக்கும் பொருட்டு, சாலையில் வெள்ளை பிரதிஒளிப்பான் அமைக்கப்பட வேண்டும். ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்ட பேரிகார்டுகள் சாலையின் இரண்டு பக்கத்திலும் வைக்கப்பட வேண்டும். முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

அவதானப்பட்டி மேம்பாலம் இறக்கம், கே.ஆர்.பி டேம் சர்வீஸ் சாலை மற்றும் திம்மாபுரம் மேம்பாலம் இறக்கம், காவேரிப்பட்டணம் - சேலம் இணைப்பு சாலை, பையூர் மேம்பாலம் இறக்கம் ஆகிய இடங்களில் பிரதான சாலையில் இரு பக்கத்திலும் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் பொருட்டு, தடிமனான நிலையில் உள்ள வெள்ளை ஒளிரும் பட்டைகளை மேம்பால இறக்கத்தின் இருபுறமும் பொருத்தப்பட வேண்டும்.

விழிப்புணர்வு

தானாக ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும். இதே போல், விபத்துகளை தடுக்கும் பொருட்டு இதுபோன்ற இடங்களில் அன்றாடம் ஒரு போக்குவரத்து காவலரை நியமித்து, போக்குவரத்து இடையூறுகளை சீர் செய்யப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை வாசகம் எழுத்தப்பட்டு வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எனவே, பொதுமக்கள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை கடைபிடித்து உயிரிழப்புகளை தவிர்த்து உயிர்களை பாதுகாத்து விபத்தில்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்