நாமக்கல் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு வங்கி கடன் உதவி கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு வங்கி கடன் உதவி கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்;
நாமக்கல் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு வங்கி கடன் உதவி வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.10 லட்சம் நிதிஉதவி
உணவுப் பதப்படுத்தும் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டம் என்கிற வங்கிக்கடனுடன் கூடிய மானிய நிதியுதவி திட்டம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2020-2021-ம் ஆண்டு முதல் 2024-2025-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட உள்ள மற்றும் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களுக்கு வங்கிக்கடனுடன் கூடிய மானிய நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதிஉதவி பெற்று பயன்பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
3 சதவீத வட்டி மானியம்
இதில் பயன்பெறும் பயனாளிக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு 2022-2023-ம் ஆண்டிற்கு தனிநபர் அடிப்படையில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் புதிய நிறுவனங்கள் தொடங்குதலுக்கு 139 எண்ணிக்கைகள் இலக்கு பெறப்பட்டு உள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 36 பயனாளிகள் எண்ணெய் ஆலை, மாவு மில், தீவனம் அரைக்கும் எந்திரம், வெல்ல உற்பத்தி ஆலைகள், அடுமனை தயாரிப்புகள் மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட அனைத்து வேளாண்மை உணவுப் பொருட்கள் ஆகியவற்றிற்காக சுமார் ரூ.5 கோடி வரையில் வங்கிகளில் வங்கிக்கடனுடன் கூடிய மானிய நிதியுதவி பெற்று பயனடைந்துள்ளனர்.
இதில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி அலுவலர் (வேளாண் வணிகம்) அல்லது வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.