பொதுமக்களிடம் தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் வசூல்
வாழப்பாடி பகுதியில் பிரதமர் மோடி பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஆவணங்களை சரிபார்ப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்த தனியார் நிறுவன ஊழியர்கள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.;
வாழப்பாடி:-
வாழப்பாடி பகுதியில் பிரதமர் மோடி பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஆவணங்களை சரிபார்ப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்த தனியார் நிறுவன ஊழியர்கள் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உயிரோடு இல்லாதவர்களுக்கு காப்பீட்டு திட்ட பணம் வழங்கப்பட்டு ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கே.ஒய்.சி. ஆவணங்களை சரிபார்க்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடந்த 2 நாட்களாக கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவன தற்காலிக ஊழியர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் பிரதமர் மோடி அறிவித்த மருத்துவ காப்பீட்டு திட்டம் என்று கூறி ஆவணங்கள் சேகரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் விசாரணை
குறிப்பாக வாழப்பாடி பகுதியில் மட்டும் பொதுமக்கள் 3 ஆயிரம் பேரிடம் குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் முதல் ஒவ்வொருவருக்கும் 30 ரூபாய் கொடுத்தால் தனித்தனியாக தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்குவதாக கூறி ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகிய ஆவணங்களை கடந்த 2 நாட்களாக அந்த தனியார் நிறுவனத்தினர் சேகரித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது உரிய அனுமதி இன்றி லட்சக்கணக்கில் பொதுமக்களிடம் வசூல் செய்த பணத்தையும் ஆவணங்களையும் திருப்பி கொடுக்க அந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கல்லூரி மாணவர்களை தின சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தி தனியார் நிறுவனம் தமிழகம் முழுவதும் இந்த வசூல் வேட்டை நடத்திய தகவல் அறிந்து அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் இதுபோன்று பல்வேறு கிராமங்களில் முகாமிட்டு ஆவணங்களை மட்டும் வாங்கிவிட்டு தனியார் நிறுவனத்தினர் தலைமறைவாகி இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகாரி விளக்கம்
இது குறித்து உயர் மருத்துவ காப்பீட்டு திட்ட சேலம் மாவட்ட மேலாளர் முரளி கூறும் போது, 'ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மத்திய அரசு கே.ஒய்.சி. ஆவணங்களை சரிபார்க்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்பதும் உண்மை தான். ஆனால் அவ்வாறு ஆவணங்களை சரிபார்க்க பொதுமக்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. அவ்வாறு பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது பொதுமக்கள் போலீசில் புகார் அளிக்கலாம்' என்றார்.