உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 41 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
படித்து முடித்து விட்டு வேலை தேடி அலையும் இளைஞர்கள் இன்று ஏராளமாக உள்ளனர். ஆனால் இளைஞர்களுக்கு படிக்கும்போதே வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்ற வகையில் அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு "அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேசன் லிட்" மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 240 மணி நேரம் வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் 49 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 3 தனியார் நிறுவனங்கள் மூலம் ௪௧ பேர் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கான ஊதியத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி நியமன ஆணையை நேர்முகத்தேர்வு ஒருங்கிணைப்பாளர் தினேஷ் முன்னிலையில் கல்லூரியின் முதல்வர் கல்யாணி வழங்கினார். கல்லூரியின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறைப்பேராசிரியர் கதிர்வேலு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.