கோவை சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது
கோவை சம்பவம்: மத்திய உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது அண்ணாமலை தகவல்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவையில் திட்டமிடப்பட்டிருந்த தற்கொலைப்படை தாக்குதல் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அல்ல, வெடிபொருள் எடுத்துச் சென்ற வாகனம் இறைவன் அருளால் விபத்துக்கு உள்ளானதால் பொதுமக்களின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் மெத்தனப்போக்குதான் முழு முதல் காரணம். 18-ந்தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, பி.எப்.ஐ. என்ற பயங்கரவாத அமைப்பை தடை செய்த பின் பல இடங்களில் தாக்குதல் நடத்த சொல்லி அந்த அமைப்பின் தலைவர்கள், தொண்டர்களிடம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இப்படி ஒரு எச்சரிக்கை வந்த பின்பும் தமிழக அரசு உறங்கி கொண்டிருந்தது ஏன்?. 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு பிறகு முபினை கண்காணிக்குமாறு தமிழக உளவுத்துறை மற்றும் கோவை காவல் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கண்காணிப்பை நிறுத்தியது ஏன்?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.