கோவை சிலிண்டர் வெடிவிபத்து: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை சிலிண்டர் வெடிவிபத்து சம்பவத்தில் தமிழக அரசு மீது பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தி உள்ளார்.

Update: 2022-10-23 17:08 GMT

சென்னை,

கோவையில் இன்று காலை காரில் எடுத்து சென்ற 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் வந்த நபர் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனை தொடர்ந்து கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது யார்? என்பது குறித்தும் காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்துள்ளது.

ஜமேசா முபின் உக்கடம் பகுதியில் பழைய துணி விற்பனை செய்யும் வியாபாரம் செய்துவந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜமேசா முபினிடம் என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜமேசா முபினின் வீட்டில் சில வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜமேசா முபினின் வீட்டில் இருந்து பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சோதனைச்சாவடியில் போலீசாரை பார்த்து பயந்து ஓடியதில் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கோவை சிலிண்டர் வெடிவிபத்து சம்பவத்தில் தமிழக அரசு மீது பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கோவை சிலிண்டர் வெடிப்பு என்பது வெறும் சிலிண்டர் வெடிப்பு அல்ல. இது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு கொண்ட பயங்கரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து இதை ஒப்புக்கொண்டு தெளிவுபடுத்துவாரா? தமிழ்நாடு அரசு இந்த தகவலை சுமார் 12 மணி நேரமாக மறைத்து வருகிறது. இது தமிழ்நாடு மாநில உளவுத்துறை மற்றும் திமுகவின் தோல்வி இல்லையா? குற்றம்சாட்டப்பட்டவர் தாக்குதலுக்கு திட்டமிட்டபோது உயிரிழந்து இருக்கிறார்.

இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு உள்ளது. இதற்கு வெளிநாட்டில் இருந்து திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு மண்ணில் சில சக்திகள் இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன. இனியாவது இறக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சர் ஸ்டாலின் எதையும் மறைக்காமல் வெளியில் வந்து தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்."

 என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்