சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்;

Update:2022-06-30 20:32 IST


கோவையில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.

மாநகராட்சி கூட்டம்

கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடந்தது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட, பாதாள சாக்கடை இணைப்புக்கு கொடுக்க வேண்டிய வைப்புத்தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என்ற தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று கவுன்சிலர்கள் கூறினார்கள். இதையடுத்து அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்பிறகு கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-

குடிநீர் வினியோகம்

மீனா லோகு (மத்திய மண்டல தலைவர்):- கோவை மாநகர மக்களுக்கு தேவையான அளவுக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 20 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது ஏன் என்பது தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் முறையாக பதில் கூறுவது இல்லை என்றார். அப்போது பெரும்பாலான கவுன்சிலர்கள் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பேசினார்கள்.

ராமமூர்த்தி (கம்யூனிஸ்டு):- கோவை மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தற்போது கொண்டு வரப்பட்டு உள்ள அம்ருத் திட்டத்தால் எவ்வித பயனும் இல்லை. அதை ரத்து செய்ய வேண்டும். மேலும் குடிநீர் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்தி சீரான குடிநீர் வழங்க வேண்டும்.

உதயகுமார் (தி.மு.க.):- குறிச்சி, குனியமுத்தூர் குடிநீர் திட்டம் ரூ.415 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் எவ்வித பயனும் இல்லை. சிறுவாணி மெயின் குழாயில் பேரூரில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் நேரடியாக குழாய் இருக்கிறது. அதன் அருகே குழாய் பதித்து குடிநீர் கொண்டுவந்தாலே போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் தேவையில்லாமல் 15 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதித்து குடிநீர் கொண்டு வருகிறார்கள். இந்த திட்டத்தால் எவ்வித பயனும் இல்லை. எனவே இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஏற்கனவே இருக்கும் குழாய் அருகே கூடுதலாக குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வர வேண்டும்.

மேயர் கல்பனா: குடிநீர் தொடர்பாக அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இலக்குமி கார்த்திக் (கிழக்கு மண்டல தலைவர்):- கேபிள் அமைக்க சாலையோரம் குழி தோண்டுவதால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. எனவே அதிக ஆழத்துக்கு குழி தோண்ட அனுமதி அளிக்கக்கூடாது.

துடியலூர் ரெயில் நிலையம்

சித்ரா தங்கவேல் (ம.தி.மு.க.):- துடியலூரில் உள்ள ரெயில் நிலையம் கடந்த 2015-ம் ஆண்டில் மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு பயணசீட்டு கொடுக்க முகவர் யாரும் இல்லாததால் மூடப்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்த ரெயில் நிலையம் மூடப்பட்டால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். எனவே மாநகராட்சி நிர்வாகம், ரெயில்நிலைய அதிகாரிகளிடம் பேசி, பயணசீட்டு முகவரை நியமித்து நடத்த வேண்டும்.

அலிமா ராஜாஉசேன் (எஸ்.டி.பி.ஐ.):- 84-வது வார்டில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி இல்லை. தெருநாய்கள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்ரா வெள்ளியங்கிரி (ம.தி.மு.க.):- பீளமேடு போலீஸ் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதியில் இருந்து எல்லைத்தோட்டத்தை இணைக்கும் இணைப்பு திட்ட சாலையில் தார்ரோடு, தெருவிளக்கு வசதியை உடனடியாக அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் பல்வேறு கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.


அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா

கோவை மாநகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்களான பிரபாகரன், ஷர்மிளா, ரமேஷ் ஆகியோர் விக்டோரியா ஹாலுக்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மேயர் வீடு, மாநகராட்சி மண்டல அலுவலகங்களை புதுப்பிக்க பலகோடி ரூபாய் ஒதுக்கி வரிப்பணத்தை வீணாக்குவதாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து இருந்தனர். ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதால் பிரபாகரன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பின்னர் கூட்டம் தொடங்கியதும் அதில் பங்கேற்ற கவுன்சிலர்கள் ஷர்மிளா, ரமேஷ் ஆகியோர் சிறிது நேரத்தில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


குனியமுத்தூரில் கருணாநிதிக்கு சிலை

மாநகராட்சி கூட்டம் தொடங்கியதும், கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் இருந்து அதிகளவில் குடிநீர் எடுக்க அனுமதி பெற்று கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானத்தை மேயர் கல்பனா கொண்டு வந்தார். கவுன்சிலர்கள் ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுபோன்று கோவை குனியமுத்தூர்-பாலக்காடு ரோடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதிக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு வழிமுறைகளின்படி இந்த சிலை அமைக்க அனுமதி கேட்பது என்ற தீர்மானத்தை துணை மேயர் வெற்றிச்செல்வன் கொண்டு வந்தார். இந்த தீர்மானமும் கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்