கோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்

கோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக வாங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-06-24 19:15 GMT

பொள்ளாச்சி

கோவை மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக வாங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கொப்பரை தேங்காய்

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தேங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதற்கிடையில் ஏற்றுமதி பாதிப்பு, வரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் விலை குறைந்து உள்ளது. தேங்காய் விலையை கட்டுப்படுத்த கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி உள்பட 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டன.

கூடுதலாக கொள்முதல்

குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு அரவை கொப்பரை தேங்காய் ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை தேங்காய் ரூ.117.50 அரசு விலை நிர்ணயம் செய்து உள்ளது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கொப்பரை தேங்காய் கொள்முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொள்முதல் தேதி செப்டம்பர் மாதம் வரை இருக்கும் நிலையில், கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு, செஞ்சேரி, சூலூர், தொண்டாமுத்தூர், கோவை, அன்னூர், காரமடை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கியது. கோவை மாவட்டத்திற்கு 22 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

95 சதவீதம் நிறைவு

இந்த ஆண்டு தேங்காய் வரத்து அதிகமாக உள்ளது. இதற்கிடையில் வெயிலின் தாக்கம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்காததால் கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் தற்போது வரை 20 ஆயிரத்து 863 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு ரூ.226 கோடியே 58 லட்சத்து 24 ஆயிரத்து 970 ஆகும். மேலும் 95 சதவீதம் கொப்பரை தேங்காய் கொள்முதல் முடிவடைந்து உள்ளது. கொள்முதல் தேதி இருப்பதால் கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்