கோவை கார் வெடிப்பு வழக்கு - கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் தொடர உத்தரவு
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் தொடர கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை,
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
இவ்வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதில் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை மட்டும் கோவை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளித்தனர். ஆனால் 3 நாட்கள் மட்டும் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 3 நாள் விசாரணை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அந்த 5 பேரும் கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது கைது செய்யப்பட்ட 5 பேரும் நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் தொடர நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் நீதிமன்றத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.