கோவை வங்கி கொள்ளை சம்பவம் - இளைஞர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
போலீசாரின் விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்தது.
கோவை,
கோவையில், தனியார் வங்கியில் புகுந்து, லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற இளைஞரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் மாதம், கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கியின் பூட்டை உடைத்து, லாக்கரில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் மர்மநபர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மனோஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் அன்னூர் அருகே மனோஜை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனையடுத்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வங்கியில் கொள்ளையடித்ததாக தெரியவந்தது. இதனையடுத்து, மனோஜ் கைது செய்த போலீசார், அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.