தேங்காய் பருப்பை விற்க முடியாமல் தென்னை விவசாயிகள் தவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு கொள்முதல் இலக்கை திடீரென குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் தேங்காய் பருப்பை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

Update: 2023-06-30 15:26 GMT

தேங்காய் பருப்பு கொள்முதல் நிறுத்தம்

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தலைவர் பரமசிவம்:-

திருப்பூர் மாவட்டத்தில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தேங்காய் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4 ஆயிரம் டன் தேங்காய் பருப்பு கொள்முதல் செய்வதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு கொள்முதல் செய்யும் அளவை குறைத்துவிட்டனர். 2 ஆயிரத்து 800 டன் தேங்காய் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு பிறகு நிறுத்தி விட்டனர். 6 ஆயிரம் தென்னை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு கொடுக்க பதிவு செய்திருந்தனர். தற்போது வரை 3ஆயிரத்து 109 விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள வியாபாரிகள் தேங்காய் பருப்பை விற்பனை செய்யாமல் வைத்துள்ளனர்.

அதுபோல் தேங்காய் பருப்பு கொள்முதல் செய்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் உள்ளனர். 1 ஏக்கருக்கு 900 கிலோ தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது 300 கிலோ மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். தென்னை பிரதான விவசாயமாக உள்ள இங்கு தேங்காய் கொள்முதலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைத்துள்ளது ஏற்புடையதாக இல்லை. திருப்பூர் மாவட்ட கலெக்டர் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலை

இதுபோல் 1 கோடியே 25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. ஆனால் ஆவின் மூலமாக 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தனியார் பால் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் செல்கிறார்கள். ஆவின் நிறுவனத்தை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை அருகே அந்தியூரில் தனியார் பிளாஸ்டிக் கழிவு அரைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. மூச்சுத்திணறல் ஏற்படுவதால் இந்த நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்துவிட்டு சென்றனர். தற்போது இரவு நேரத்தில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு நிறுவனத்தின் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

லிட்டருக்கு ரூ.1.50 குறைப்பு

விவசாயி ரத்தினசாமி:-

ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகள், குளிரூட்டும் நிலையத்தில் இருந்து பால் அனுப்பி வைத்து அதன்பிறகு பணம் செலுத்தப்படுகிறது. லிட்டருக்கு ரூ.1.50 விவசாயிகளுக்கு குறைத்து கொடுக்கிறார்கள். அதுபோல் திருப்பூர் ஒன்றியத்தின் சார்பில் ஊக்கத்தொகை வருடந்தோறும் கொடுக்கப்பட்டதையும் நிறுத்தி விட்டார்கள். கேட்டால் ஒன்றியம் நஷ்டத்தில் செயல்படுவதாக தெரிவிக்கிறார்கள். ஆவின் நிறுவனத்தை முறைப்படுத்தி பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்