தென்னை மரங்களுக்கு மூடாக்கு போடும் விவசாயிகள்

Update: 2022-06-19 15:47 GMT


குடிமங்கலம் பகுதியில் தண்ணீரை சேமிக்கும் வகையில் தென்னை மரங்களுக்கு விவசாயிகள் மூடாக்கு போட்டு வருகின்றனர்.

தென்னை விவசாயம்

குடிமங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 250 முதல் 300 தேங்காய்கள் வரை மகசூல் கிடைக்கும். ஒரு சில பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்க வில்லை. இதனால் விவசாயிகள் தென்னை மரத்தின் மகசூலை அதிகரிக்கும் பொருட்டு தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தென்னை மரங்களுக்கு மூடாக்கு அமைத்து வருகின்றனர். இதன் மூலம் தென்னை மரங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது.தென்னை மரங்களுக்கு மூடாக்கு போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது

தண்ணீர் சேமிப்பு

தென்னை மட்டைகளில் அடிப்பகுதியைநீக்கிவிட்டு மேல்பகுதியை அப்படியே போட்டுவிட்டால் சில மாதங்களில் மட்கி மூடாக்காக மாறிவிடும். தென்னை மட்டைகள் மற்றும் தேங்காய் மட்டைகளை எந்திரத்தின் மூலம் தூளாக்கி மரங்களை சுற்றிலும் தூவலாம்.தென்னை மரத்தில் இருந்து சுமார் மூன்றடி தள்ளி குழி தோண்டி அதில் தென்னை மட்டைகள். தேங்காய் மட்டைகள், இயற்கை உரங்களை போட்டு மண்ணால் மூடிவிட வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு வழி முறையை பின்பற்றி மூடாக்கு அமைக்கலாம். இந்த மூடாக்குகளால் வழக்கமாக கொடுக்கும் தண்ணீரை விட தென்னை மரங்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் கொடுத்தால் போதுமானது.

தென்னை மரங்களுக்கு மூடாக்கு போடப்படுவதால் மண்ணின் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும்.மண்புழுக்கள் எப்பவும் இருக்கிற மாதிரி 10அடிக்கு கீழ் போய்விட்டு வர்றதால மண்ணில் உயிரோட்டம் எப்போதும் இருக்கிறது. தென்னை மரங்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது. இந்த முறையின் மூலம் மட்கும் ஒவ்வொரு கிலோவும்4 லிட்டர் தண்ணீரை சேமிக்கும். தென்னந்தோப்புகளில் இம்முறையை பின்பற்றுவதால் தண்ணீர் பெருமளவு சேமிக்கப்படுகிறது.இது வறட்சியான காலத்தில் தென்னை மரங்களை காப்பாற்ற உதவுவது மட்டுமல்லாமல் கூடுதல் மகசூல் கொடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்