தென்னை சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல்

Update: 2023-04-24 14:21 GMT


குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகளடங்கிய குழுவினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

கள ஆய்வு

குடிமங்கலம் வட்டாரத்தில் மொத்த சாகுபடி பரப்பான சுமார் 52 ஆயிரம் ஏக்கரில் கிட்டத்தட்ட 34 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தென்னை மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் புதிய தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டு சாகுபடி பரப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.சென்னை வேளாண்மை துணை இயக்குனர் (பயிர் பாதுகாப்பு) சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா, விஞ்ஞானிகள்-வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, கலையரசன், குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.குடிமங்கலம் வட்டாரத்தில் இலுப்ப நகரம் கிராமத்தில் தென்னந்தோப்புகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த கள ஆய்வின் போது தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, தென்னை குருத்தழுகல், காண்டாமிருக வண்டு தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு குறித்து கண்டறிந்தனர்.மேலும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.

ஒருங்கிணைந்த முறை

ரூகோஸ் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலிதீன் தாள்களாலான ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 8 என்ற அளவில் வைத்தல், விசைத் தெளிப்பான் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தல், கிரைசோபெர்லா இரைவிழுங்கி முட்டை மற்றும் என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் விடுதல் மூலம் கட்டுப்படுத்தலாம்.குருத்துப் பகுதி நன்கு நனையும்படி ஒரு லிட்டருக்கு 0.5% கார்பன் ஆக்சி குளோரைடு தெளித்து கட்டுப்படுத்தலாம்.தென்னை காண்டாமிருக வண்டினை இனக்கவர்ச்சிப் பொறி விளக்குப் பொறி வைத்தும் எருக்குழியில் உள்ள புழுப் பருவ வண்டுகளை அழிக்க மெட்டாரைசியம் அனிசோபிலே மருந்தினை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.மேலும் தென்னையில் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையினால் குரும்பை கொட்டுதல், காய் சிறுத்தல் மற்றும் காய் பருப்பு குறைதல் போன்றவை ஏற்படலாம்.எனவே ஒவ்வொரு மரத்துக்கும் தென்னை நுண்ணூட்டச் சத்து உரங்கள் ½ கிலோ வீதம் 6 மாதத்திற்கு ஒருமுறை இட வேண்டும்.மேலும் தென்னந்தோப்புகளில் ரசாயன மருந்துகளை தவிர்த்து இயற்கையான முறையில் பூச்சி-நோய்களை ஒருங்கிணைந்த முறையான இடை உழவு, பசுந்தாள் செடிகளான தக்கை பூண்டு விதைத்தல், சரிவிகித பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட உரங்களை இடுதல், நன்கு மக்கிய சாண எரு உபயோகித்தல், வேப்பம் புண்ணாக்கு இடுதல், முறையான நீர்ப்பாசனம், இனக்கவர்ச்சிப் பொறி, ஒட்டுப் பொறி மற்றும் விளக்குப் பொறி வைத்தல், உயிரின பூஞ்சாணக் கொல்லிகள் பயன்படுத்துதல் மற்றும் இறை விழுங்கிகள் விடுதல் போன்றவற்றை கடைப்பிடித்தால் தென்னைகளை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றலாம்'என்று அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்