முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம்; 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்;
கோவை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு செல்கிறார். பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்துகிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காலை 10.45 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடைக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார்.
இந்த விழாவில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 509 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதேபோல், 416 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.