ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யில் தொழில்நுட்ப மையம் -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யில் தொழில்நுட்ப மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஈரோடு ஐ.டி.ஐ.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரூ.762 கோடியே 30 லட்சம் செலவில் ஈரோடு உள்பட 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தொழில் நுட்ப மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. இதன் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடந்தது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். அதே நேரம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்திலும் தொழில் நுட்ப மைய தொடக்கவிழா காணொலி காட்சி மூலம் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.டி.ஐ. முதல்வர் ரவிச்சந்திரன் வரவேற்றார். நிலைய மேலாண்மைக்குழு தலைவர் மயில்சாமி நன்றி கூறினார்.
120 பேர் படிக்கலாம்
ஈரோடு ஐ.டி.ஐ. கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
அதாவது 1965-ம் ஆண்டு இந்திய அரசின் 3-வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த ஐ.டி.ஐ.-யில் இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இங்கு 372 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். தற்போது டாடா டெக்னாலஜிஸ் மூலம் தொழில் 4.0 மையமாக இது மாற்றப்பட்டு இருக்கிறது. இதனால் கூடுதலாக 120 பேர் பயிற்சி பெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.