சாலை அமைப்பு பணிக்காக மீஞ்சூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
சாலை அமைப்பு பணிக்காக மீஞ்சூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை அமைப்பு பணிக்காக மீஞ்சூர் காட்டூர் திருப்பாலைவனம் நெடுஞ்சாலையில் இரு பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட சரக்கத்தின் நெடுஞ்சாலை துறையின் மூலம் கையகப்படுத்தும் பணிக்காக இழப்பீடு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அரியன்வாயல் கிராமத்தில் இழப்பீடு பெற்றவர்கள் நிலத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்காத நிலையில் நில உரிமையாளர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி திட்ட கோட்ட பொறியாளர் மலர்விழி உத்தரவின் பேரில், கோட்ட உதவிப்பொறியாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில், உதவி பொறியாளர் ஜெயமூர்த்தி தலைமையில் நில எடுப்பு பணிகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றும் பணி நேற்று துவங்கப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்கள் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகரிடம் முறையிட்டதன் பேரில் செப்டம்பர் மாதம் 4-ந் தேதிக்கு பின் நில எடுப்பு பணிகள் கட்டிடங்கள் அகற்றும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீடு, கடைகளை இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.