தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்

வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-08-17 19:29 IST

வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு

வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்கள், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிப்பவர்கள் என்று ஒப்பந்த அடிப்படையில் 1,600-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு பி.எப்., ஈ.எஸ்.ஐ. பிடித்தம் போக தினக்கூலியாக ரூ.426 வழங்கப்பட்டு வந்தது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தங்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று ஒப்பந்த ஊழியர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுஜாதா வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 977 பேருக்கு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தினக்கூலியாக ரூ.535 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார், மாநகர நல அலுவலர் (பொறுப்பு) முருகன், தெற்கு போலீசார் ஆகியோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கணக்கிட்டு வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை மாநகராட்சி கமிஷனர் வெளியிட வேண்டும் என்று கூறினர்.

அதற்கு கமிஷனர் அசோக்குமார் கூறுகையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படும் என்று மேயர் அறிவித்துள்ளார். அதன்படி தினக்கூலி உயர்த்தி வழங்கப்படும். டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு தினக்கூலி உயர்வு தொடர்பாக கலெக்டரிடம் கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிவித்தார். அதனை ஏற்க மறுத்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பிற்பகல் 2 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்