மதுரையில் 2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் - 1,600 டன் குப்பைகள் தேக்கம்
மதுரையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;
மதுரை,
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் என 6000-க்கும் மேற்பட்டோர் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், கொரோனா நிவாரண தொகையாக 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு தின ஊதியம் 625 ரூபாய் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் உத்தரவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டம் 2-வது நாளாக இன்று தொடர்ந்து வரும் நிலையில், மதுரை மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 800 டன் குப்பைகள் அள்ளப்பட்டு வந்த நிலையில், 2 நாட்களாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு சுமார் 1,600 டன் குப்பைகள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.