காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - மற்றொரு சம்பவத்தில் பிளஸ்-2 மாணவி சாவு
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் பிளஸ்-2 மாணவி தூக்கில் தொங்கினார்.;
பழைய வண்ணாரப்பேட்டை கெனால் தெரு சி.பி.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மணலியில் உள்ள இரும்பு பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாட்சாயினி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியின் மகன் சங்கீதபிரியன் (வயது 15). இவர் சென்னை பிராட்வேயில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய சங்கீத பிரியன் தாய் தாட்சாயினிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய் தாட்சாயிணி செல்போனில் சங்கீத பிரியனை கண்டித்துள்ளார்.
இதைக்கேட்டு உடனே சங்கீத பிரியன் செல்போனை அனைத்து விட்டு உள்ளார். மீண்டும் தாய் தாட்சாயினி போன் செய்தபோது செல்போனை எடுக்காததால், பதற்றம் அடைந்த தாட்சாயினி உடனே வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள் தாழ்பாள் போடப்பட்டு இருந்தது.
தாட்சாயினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் மின்விசிறியில் சங்கீத பிரியன் தூக்கில்தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனே அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் மாணவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உறவினரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், ராயபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சாய்ஸ்ரீ (17). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சாய்ஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால், தாய் ஜெயபாரதி கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சாய்ஸ்ரீ வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல், சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவை சேர்ந்தவர் குமார் (48). இவரது மகன் தினேஷ் (16). இவர் மயிலாப்பூர் குயில்தோப்பில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், அவர் சரிவர பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால், அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால், மனமுடைந்த அவர் நேற்று மாலை 7 மணியளவில் வீட்டில் தற்கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.