திருச்சி அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக மோதல்; 3 பேர் படுகாயம்-திருவிழா ரத்து

திருச்சி அருகே கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

Update: 2023-06-21 19:31 GMT

கருத்து வேறுபாடு

திருச்சி அருகே மணிகண்டம் அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்தநிலையில் கோவில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று பள்ளப்பட்டியை சேர்ந்த மணிராஜ் மகன் முத்துக்குமார் (வயது 35), மலையாளம் என்பவரது மகன் அஜித் (34) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் அதே ஊரை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மாற்றுத்திறனாளியுமானபழனிச்சாமி என்பவரது வீட்டிற்கு சென்று திருவிழா நடைபெறுவது குறித்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

திருவிழா ரத்து

அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அஜித் மற்றும் முத்துக்குமார் தரப்பினர் பழனிச்சாமி வீடு மற்றும் அவரது கார் ஆகியவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தியதுடன் பழனிச்சாமி மற்றும் அவரது சகோதரி பத்மா (44), பழனிவேல் மனைவி இளஞ்சியம் (50), கர்ப்பிணியான சரண்யா (27) ஆகிய 4 பேரையும் கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளர். இதில் பத்மா, இளஞ்சியம் சரண்யா ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளனர். இதையடுத்து, அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜஸ்டின் திரவியராஜ், திருநாவுக்கரசு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் அங்கு அசம்பாவிதம் நடக்காத வண்ணம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீசார் வழக்கு

இந்த சம்பவம் குறித்து பத்மா கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், மணிவேல் மகன் கேசவன் (24) முருகன் மகன் தனபால் (30) மலையாளம் மகன் அஜித், பிரவீன்ராஜ் (19) மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அதேபோல் பிரவீன்ராஜும் தங்களை பழனிச்சாமி தரப்பினர் தாக்கியதாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பழனிச்சாமி, பத்மா, ஜானகி, சாரதா, சண்முகம் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்