பொதுமக்கள்-போலீசாருக்கு இடையே வாக்குவாதம்

பொதுமக்கள்-போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2023-05-21 19:33 GMT

அன்னவாசல் அருகே வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் வைகாசி தேர்திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இந்த விழாவிற்கு வயலோகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதையொட்டி இரவு பல்வேறு பகுதியில் கச்சேரி, கரகாட்டம், நாடகம் உள்ளிட்டவை நடைபெறும். இந்த நிலையில் அன்னவாசல் அருகே உள்ள குளவாய்ப்பட்டியை சேர்ந்த ராசு என்பவர் குளவாய்ப்பட்டியில் பூச்சொரிதல் வைத்து கச்சேரி நடத்த மதுரை நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார். அப்போது நீதிமன்றத்தில் போலீசார் பல்வேறு காரணங்களை காட்டி அனுமதி வழங்க வேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த சிலரும் பூச்சொரிதல் கச்சேரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பூச்சொரிதல் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து பூச்சொரிதலுக்கு உண்டான பணிகளில் அப்பகுதியினர் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று காலை குளவாய்ப்பட்டிக்கு சென்ற போலீசார் குளவாய்ப்பட்டி பொது மக்களிடம் பூச்சொரிதல் நடத்துவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியபோது திரளான பெண்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸ் வாகன கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்காமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் குளவாய்ப்பட்டி பொதுமக்கள் பூச்சொரிதல் விழாவிற்காக வாங்கி வைத்திருந்த பூக்களை ரோட்டில் கொண்டு வந்து வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த இலுப்பூர் தாசில்தார் ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்