போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

ஆவுடையார்கோவில் அருகே விவசாயியிடம் சங்கிலி பறித்த போதை ஆசாமிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-10 18:52 GMT

சங்கிலி பறிப்பு

ஆவுடையார்கோவில் அருகே துரையரசபுரத்தில் சட்டவிரோதமாக மதுபானக்கூடம் செயல்படுவதால் இளைஞர்கள் எந்நேரமும் மது போதையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சாலையோரத்தில் மது அருந்தி விட்டு, கஞ்சாவும் புகைத்து கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பஞ்சாத்தி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது போதை ஆசாமிகள் சிலர் அவரை தாக்கி தங்கசங்கிலியை பறித்துசென்றதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் போதை ஆசாமிகளை கைது செய்ய வலியுறுத்தி அறந்தாங்கி- ஆவுடையார்கோவில் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார், ஆவுடையார்கோவில் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்தனர்.

இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்