மூதாட்டி உடலை வாகனத்தில் வைத்து பொதுமக்கள் மறியல்

சுடுகாட்டு பாதைக்கு கூடுதல் இடம் கேட்டு மூதாட்டி உடலை வாகனத்தில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update:2023-09-06 00:27 IST

மூதாட்டி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வடக்கு தாளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சகுந்தலா (வயது 60). இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் சகுந்தலாவின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல உறவினர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். இதற்கிடைேய அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை பட்டா நிலத்தில் இருந்து வந்தது.

சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனி நபர் ஒருவர் விலைக்கு வாங்கி பட்டா செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பட்டா வாங்கிய நபர் சுடுகாட்டுக்கு செல்ல சுமார் 6 அடி பாதையை ஒதுக்கி மீதம் உள்ள இடத்தை முள்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் சகுந்தலா உடலை வாகனத்தின் மூலம் சுடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர். அப்போது தனி நபர் ஒதுக்கிய 6 அடி பாதையில் உடலை எடுத்து சென்ற வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனால் சம்பந்தப்பட்ட நபரிடம் 6 அடி பாதைக்கு பதிலாக 10 அடி பாதை ஒதுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் நிலத்தை பட்டா செய்த நபர் 10 அடி பாதை ஒதுக்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சகுந்தலா உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் பட்டா செய்து முள்வேலி அமைத்திருப்பதை அகற்றக்கோரி புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் இறந்தவர் உடலை எடுத்து சென்ற வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தாசில்தார் புவியரசன், பொன்னமராவதி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், நமணசமுத்திரம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சகுந்தலாவின் உடலை அவரது உறவினர்கள் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சாலை மறியலால் புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்