ஓட்டல் கழிவுகளுடன் வந்த டெம்போவை சிறைபிடித்த பொதுமக்கள்

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஓட்டல் கழிவுகளுடன் வந்த டெம்போவை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-26 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஓட்டல் கழிவுகளுடன் வந்த டெம்போவை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இறைச்சி கழிவுகள்

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை தமிழக எல்லை பகுதிகளுக்குள் கொண்டு வந்து இரவோடு இரவாக ஒதுக்கு புறமான பகுதிகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இப்படி கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை அவ்வப்போது பொதுமக்களும் பிடித்து போலீசில் ஒப்படைக்கின்றனர். அப்போது அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து கழிவுகளோடு மீண்டும் கேரளாவிற்கு அனுப்பி விடப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து கழிவுகளுடன் ஒரு டெம்போ மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வேகமாக வந்தது. அந்த டெம்போவில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் டெம்போவை சிறை பிடித்து தடுத்து நிறுத்தினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கழிவுகளை ஏற்றிகொண்டு வேகமாக சென்றதால் டெம்போவை தடுத்து நிறுத்தி சிறைபிடித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் அந்த டெம்போவை மீட்டு சோதனையிட்டபோது, அதில் ஓட்டலில் உள்ள இலை மற்றும் கழிவுகள் மட்டுமே காணப்பட்டது. மருத்துவ கழிவுகளும், இறைச்சி கழிவுகளும் எதுவும் இல்லை. அந்த ஓட்டல் கழிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வில்லுக்குறியில் உள்ள ஒரு பன்றி பண்ணைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து வேகமாக ஓட்டியதற்காக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த டெம்போவை அனுப்பி வைத்தனர். அதன்பிறகே சுமார் ஒரு மணி நேர பரபரப்பு முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்