நங்கவள்ளி ராணுவ வீரருக்கு அரசு மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் சாலை மறியல்
மேச்சேரி:-
துப்பாக்கி சூட்டில் பலியான நங்கவள்ளி ராணுவ வீரருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணுவ வீரர் பலி
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரியவனவாசி மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்தவர்கள் ரவி- செல்வமணி தம்பதி. இவர்களது 2-வது மகன் கமலேஷ் (வயது 24). பி.ஏ. பொருளாதாரம் படித்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந் தேதி பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் கமலேஷ் பலியானார்.
அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
சாலை மறியல்
மதியம் 12.50 மணிக்கு அந்த வாகனம் வனவாசி அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த கமலேசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தை சிறை பிடித்தனர். அரசு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் உடல் கொண்டு வராததை கண்டித்தும், கமலேசின் இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க கூறியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நங்கவள்ளி-ஜலகண்டாபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதையடுத்து மேட்டூர் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கீதா, விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது கமலேசின் உறவினர்கள், ராணுவ வாகனத்தில் தான் உடலை கொண்டு செல்லவேண்டும். அதுவரை மறியலை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.
உடல் அடக்கம்
மாலை 4.15 மணி அளவில் சேலத்தில் இருந்து ராணுவ வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் கமலேசின் உடல் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு, சொந்த ஊரான மசக்காளியூர் பனங்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து கோவை ராணுவ தலைமை அலுவலக உத்தரவின் பேரில் தமிழ்நாடு 12-வது பட்டாலியன் சேலம் என்.சி.சி. சார்பில் அவருடைய உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் சுபேதார்கள் பாபு, ரமணா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ெதாடா்ந்து வக்கீல் ராேஜந்திரன் எம்.எல்.ஏ., தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் அனைத்து கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கமலேசின் உடல் அங்குள்ள மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.