கழிவு நீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சோளிங்கரில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோளிங்கரில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் தேங்குகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழாண்டமோட்டூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் பாசன கால்வாயில் நகராட்சி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது. அதிக அளவில் கொசுத்தொல்லையும் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் காய்ச்சலில் அவதிப்படுவதாகவும் இந்த கழிவுநீர் விவசாய நிலங்களுக்குள் செல்வதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவம் கூறப்படுகிறது.
சாலை மறியல்
எனவே கழிவுநீர் செல்ல முறையாக கால்வாய் அமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கீழாண்ட மோட்டூர் சாலையில் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த சோளிங்கர் தாசில்தார் ஆனந்தன், சோளிங்கர் பொதுப்பணித்துறை அலுவலர் சேரலாதன், போலீஸ் சுப்-இன்ஸ்பெக்டர் மோகன், கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், கிராம உதவியாளர்கள் சிவா, வேணு மற்றும் போலீசார் சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்லவழி செய்வதாக உறுதி அளித்தனர்.
அதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் ஒருமணிநேரம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.