திருவொற்றியூரில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; எதிர்திசையில் வந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம்
திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் எதிர்திசையில் வந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
மின்வெட்டு
திருவொற்றியூர் அண்ணா நகர், செல்லப்பா நகர், ஏகவல்லி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. வெயில் காலம் என்பதால் மின்சாரம் இல்லாமல் குழந்தைகள், கர்ப்பிணிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மின்வெட்டு குறித்து அப்பகுதி மக்கள் மின்சார துறைக்கு செல்போன் மூலமாகவும், மின்சார அலுவலகத்துக்கு நேரடியாகவும் சென்று புகார் அளித்தனர். ஆனால் மின்துறை அதிகாரிகள் புகாரை பெற்றுக்கொள்ளாமல், மின்வெட்டை சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், எண்ணூர் விரைவு சாலையில் திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. இது பற்றி அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் மின்வெட்டு சீர் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விபத்து
இதற்கிடையில் சாலை மறியல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து எண்ணூர் நோக்கி வந்த மாநகர பஸ்சை (தடம் எண் 4) எண்ணூர் விரைவு சாலை சுங்கச்சாவடியில் இருந்து எதிர்சாலையில் டிரைவர் ஓட்டிச்சென்றார்.
அப்போது எதிர்திசையில் வந்து கொண்டு இருந்த மாநகர பஸ்சை கவனிக்காமல் அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர், மாநகர பஸ்சின் முன்புறத்தில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கினார். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்த மனோஜ்குமார் (வயது 29) படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மோதிய வேகத்தில் பஸ்சின் முன்புறத்தில் மோட்டார் சைக்கிள் சொருகிக்கொண்டது. மாநகர பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் சுக்கு நூறாக நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர், கண்டக்டர், பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.