சட்டக்கல்லூரிகளில் அம்பேத்கர் படம் வைக்க சுற்றறிக்கை
சட்டக்கல்லூரிகளில் அம்பேத்கர் படம் வைக்க சுற்றறிக்கை அனுப்பி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தேனியைச் சேர்ந்த சசிகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தேனி அரசு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறேன். தற்போது என்னை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து, கல்லூரி முதல்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையிலும், சுதந்திர போராட்ட தலைவர்கள், சமூகத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கையாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் படத்தை வைக்கவும், பாடங்களை தமிழில் பயிற்றுவிக்கும்படியும் கோரியுள்ளார். இந்த கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொண்டுள்ளார். பின்னர் இதுதொடர்பாக மன்னிப்பு கடிதத்தை வழங்கியுள்ளார். மனுதாரர் ஏற்கனவே 2 வாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தண்டனை போதுமானது என இந்த கோர்ட்டு கருதுகிறது. தேனி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் அறையிலும் அம்பேத்கரின் படம் வைக்கப்பட்டுவிட்டது. அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாளர். சமூக நீதியின் அடையாளம். அவரது பங்கு ஈடுசெய்ய இயலாதது. ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவருக்கும் அவர் மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். சென்னை சட்டக்கல்வி இயக்குனர், தமிழகத்தின் அனைத்து அரசு கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப இந்த கோர்ட்டு வலியுறுத்துகிறது.
மனுதாரர் படிப்பிற்காக மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் நல வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்தை வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.