கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி

நீலகிரியில் தவக்காலத்தையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர்.

Update: 2023-04-02 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரியில் தவக்காலத்தையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி சென்றனர்.

சிறப்பு பிரார்த்தனை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். நடப்பாண்டு கடந்த பிப்ரவரி 22-ந் தேதி முதல் தவக்காலம் தொடங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேமை நோக்கி கழுதை மேல் அமர்ந்து பவனியாக சென்றார்.

அப்போது எருசலேம் நகரை சுற்றிலும் குருத்தோலைகளை கையில் பிடித்தபடி பாடலை பாடியவாறு சென்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி நேற்று நீலகிரி முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

குருத்தோலை ஞாயிறு

ஊட்டி சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் பங்கு தந்தை இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையில் குருத்தோலை ஞாயிறையொட்டி காலை 8 மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பின்னர் ஆலயத்தில் இருந்து குருத்தோலை முக்கிய வீதிகள் வழியாக புனித தாமஸ் ஆலயம் வரை பவனி நடந்தது. இதில் பங்கு தந்தை ஜெரேமியா ஆல்பிரட் மற்றும் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பாடல்களை பாடியபடி சென்றனர். பின்னர் காலை 10.30 மணிக்கு தாமஸ் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

சேரிங்கிராஸ் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்கு தந்தை ஸ்தனிஸ் பிரார்த்தனை செய்து குருத்தோலைகளை மந்திரித்து வழங்கினார். கிறிஸ்தவர்கள் ஆலய வளாகத்துக்குள் குருத்தோலைகளை ஏந்தி பவனியாக சென்றனர். பின்னர் திருப்பலி நடந்தது. இதேபோல் சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயத்தில் பங்கு தந்தை ராபின்சன் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

திருப்பலி

ஊட்டி புனித மரியன்னை ஆலயத்தில் பங்கு தந்தை செல்வநாதன் தலைமையில் குருத்ேதாலைகள் மந்திரித்து வழங்கப்பட்டது. குன்னூர் துய யோவான்ஸ்நானன் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. பெட்போர்டில் இருந்து தொடங்கி ஆலயத்தில் நிறைவடைந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குருத்தோலைகளை ஏந்தி பாடல்களை பாடியபடி சென்றனர். பின்னர் பங்கு தந்தை கிறிஸ்டோபர் சாம்ராஜ் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.

கூடலூர் பகுதியில் தூய மரியன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தியவாறு முக்கிய சாலை வழியாக பவனி சென்றனர். தொடர்ந்து பங்கு தந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை சார்லஸ் சிறப்பு தவக்கால தியானம் நிறைவேற்ற, திருப்பலி நடைபெற்றது. இதேபோல் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்கு தந்தை ஹென்றி ராபர்ட் தலைமையில் பவனி நடந்தது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்