அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா: பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
நொய்யல், நச்சலூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழா
நொய்யல் அருகே திருக்காடுதுறையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சிடன் தொடங்கியது. தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் தினமும் பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி மாரியம்மனை வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ேநற்று மாலை பக்தர்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடிவிட்டு மேள தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு தயார் நிலையில் இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து மாரியம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தும் வந்து பெண்கள் வழிப்பட்டனர். வாண வேடிக்கை நடைபெற்றது. இன்று (புதன்கிழமை)கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி, கிடா வெட்டு பூஜை, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நச்சலூர்
நச்சலூர் அருகே பங்களாபுதூரில் பிரசித்தி பெற்ற நாக மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 7-ந்தேதி காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. நேற்று கிடா வெட்டு பூஜை, மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைந்தது.