நெல் மணியில் 'அ' எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

விஜயதசமி திருநாளையொட்டி பள்ளிகளில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் நெல் மணியில் ‘அ’ எழுதி கல்வியை தொடங்கினர்.

Update: 2022-10-05 19:00 GMT


விஜயதசமி திருநாளில் தொடங்கும் காரியம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த நாளில் கல்வி கற்க தொடங்கினால், கல்வியில் பெரிய அளவில் சாதனை படைக்கலாம் என்பார்கள். இதனால் விஜயதசமி திருநாளில் பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். இதற்காகவே 'வித்யாரம்பம்' எனும் நிகழ்ச்சி பள்ளிகளில் நடத்தப்படுகிறது.

அதன்படி, விஜயதசமி திருநாளான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை காலையில் அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றனர்.

நெல் மணியில் 'அ'

பின்னர் விரும்பிய பள்ளிக்கு குழந்தைகளை சேர்க்க அழைத்து வந்தனர். இதையடுத்து பள்ளிகளில் விஜயதசமி வழிபாடுகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. குழந்தைகளை ஆசிரியைகள் தங்களுடைய மடியில் அமர வைத்து நெல் மணி, மஞ்சள் கலந்த அரிசியில் குழந்தைகளின் விரலை பிடித்து தமிழின் உயிர் எழுத்துகளில் முதல் எழுத்தான 'அ' எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர்.

வீட்டில் பொம்மைகளுடன் விளையாடி பழகிய குழந்தைகள் நெல் மற்றும் அரிசியில் 'அ' எழுத்தை ஆர்வமுடன் எழுதினர். மேலும் குழந்தைகளை குதூகலப்படுத்தும் வகையில் புத்தகம், சிலேடு போன்றவை வழங்கப்பட்டன. அதேபோல் ஒருசில பள்ளிகளில் விளையாட்டு சாதனங்களில் குழந்தைகளை விளையாட வைத்து உற்சாகப்படுத்தினர்.

மேலும் பள்ளிகளில் மட்டுமின்றி கோவில்களிலும் விஜயதசமியையொட்டி பூஜைகள் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடந்தது. அதில் குழந்தைகளின் நாவில் நெல் மணியால் அ எழுதப்பட்டது. ஒருசில கோவில்களில் தாயின் மடியில் அமர வைத்து குழந்தைகளை எழுத வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தன.

அச்யுதா பள்ளிகள்

இதற்கிடையே திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் விஜயதசமி தின பி.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு பள்ளி செயலாளர் மங்களராம் தலைமை தாங்கினார். செயலாளர் காயத்ரி மங்களராம் முன்னிலை வகித்தார். இதில் குழந்தைகள் ஆசிரியர்கள் முன்னிலையில் நெல்லில் எழுதி கல்வியை தொடங்கினர். பள்ளி முதல்வர் சந்திரசேகரன் குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். இதில் மேலாளர் பிரபாகரன், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல் அச்யுதா மெட்ரிக் பள்ளியிலும் விஜயதசமி தினத்தையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது. பள்ளி துணை முதல்வர் குணசேகரன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். இதில் மேலாளர் கார்த்திக், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

வத்தலக்குண்டு

வத்தலக்குண்டு பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளியில் பள்ளி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் தலைமை ஆசிரியை ரியாஅருண் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளின் கைகளை பிடித்து தட்டில் வைக்கப்பட்ட நெல்மணிகளில் 'அ' எழுத வைத்து அவர்களை பள்ளியில் சேர்த்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்