ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்,
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி பொழிக்கரை சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தினை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
'ஊட்டசத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 17,726 குழந்தைகள் மருத்துவக்குழுக்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. ஊட்டச்சத்து பற்றாக்குறையுள்ள 508 குழந்தைகள் கண்டறியப்பட்டு மாவட்ட ஆரம்ப தலையீடு மையத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்.
ஊட்டச்சத்து குறைபாடு
இதில் முதற்கட்டமாக குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இந்த ஊட்டசத்து பெட்டகம் 56 நாட்களுக்கு வழங்கப்பட்டு, வாரந்தோறும் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
இந்த ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஆரோக்கிய புரதசத்து கலவை 500 கிராம் வீதம் இரண்டும் (வெண்ணிலா சுவை), இரும்புச்சத்து சிரப் 200 மி.லி. வீதம் மூன்றும், ஒரு குடற்புழு நீக்க மாத்திரை, ஒரு காட்டன் டவல், 500 கிராம் ஆவின் நெய் உள்ளிட்டவை அடங்கியிருக்கும். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்க்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி
முன்னதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் ஊட்டச்சத்து கண்காட்சியை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம்) ஜெயந்தி, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் அமிர்த லீனா, ராஜாக்கமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் பிரீனா சுகுமார், ராஜாக்கமங்கலம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பால சரஸ்வதி, கேசவன் புத்தன்துறை ஊராட்சி தலைவர் கெவின்சா, காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆனந்த், தெங்கம்புதூர் தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் லிவிங்ஸ்டன், வக்கீல் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.