செவிலியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
கோவில்பட்டியில் செவிலியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தமிழரசன் திருமண மண்டபத்தில் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி மற்றும் சமுதாய நல செவிலியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஜெய செல்வி தலைமை தாங்கினார். பகுதி நேர செவிலியர் ரதி வரவேற்றார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர், நிதி ஆதரவுத்திட்டம், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098, மாணவர்களுக்கிடையே போதைப்பொருள் பழக்கத்தை தடுப்பது, பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, கல்வியை தொடர செய்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார்.
போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான சட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் உடன் கலந்த நன்னடத்தை அலுவலர் சுபாஷினி பேசினார். முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி நேர செவிலியர்கள் மற்றும் சமுதாய நல செவிலியர்கள் கலந்து கொண்டனர். சமுதாய நல செவிலியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.