அரசு பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடிய தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா

இடைக்காட்டூர் அரசு பள்ளி மாணவிகளிடம் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா கலந்துரையாடினார்.

Update: 2023-07-15 18:45 GMT

சிவகங்கை,

இடைக்காட்டூர் அரசு பள்ளி மாணவிகளிடம் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா கலந்துரையாடினார்.

தலைமை செயலாளர் திடீர் ஆய்வு

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் திட்ட செயலாக்கங்கள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத்துடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று அவர் திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, பள்ளி கல்வித்துறை ஆகியவைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்ட செயலாக்கங்கள் ஆகியன குறித்து, ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அதற்கான பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் ரீதியாக பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுவது மட்டுமின்றி, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் துரிதமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியில் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு, மேம்படுத்த வேண்டிய படுக்கை வசதிகள், காப்பீட்டு திட்ட பிரிவு, மருந்தகம், ஆய்வகம், ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று கொம்புகாரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கலந்துைரயாடல்

அதனை தொடர்ந்து, இடைகாட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது மாணவர்களிடையே கற்றல் முறை குறித்தும், இப்பள்ளியில் மேம்படுத்த வேண்டிய கூடுதல் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாணவர்களின் வருகை பதிவேடு, இப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மகாத்மா காந்தி நூலகத்தில் மாணவர்களின் பயன்பாடுகள் மற்றும் நூலகத்தில் புத்தக இருப்பு, கூடுதலாக நிறுவ வேண்டிய புத்தக வகைகள் மற்றும் சமையலறை, உணவின் தரம், மற்றும் கழிப்பறை வசதிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் விஜய்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்