சென்னை ராயபுரத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் - மேயர் பிரியா ஆய்வு

சென்னை ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேயர் பிரியா நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-;

Update:2022-12-21 10:57 IST

சென்னை ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், பூங்கா மேம்பாட்டு பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் உள்ள சூரிய நாராயணா தெருவில் இயங்கி வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கான சமையலறையை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சமைக்கப்பட்ட உணவை உண்டு ஆய்வு செய்ததோடு, சமையலறையில் தேவையான அளவுக்கு மளிகைப் பொருட்கள் இருப்பு உள்ளதா? என அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டறிந்தார். அதைதொடர்ந்து அர்த்தூண் சாலையில் உள்ள சென்னை பெண்கள் உருது தொடக்கப்பள்ளிக்கு சென்ற அவர், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவை பரிமாறினார்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பெண்களுக்கான பாதுகாப்புடன் கூடிய கழிவறைப்பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அண்ணா பூங்காவில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.1 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பூங்காவில் பெண்களுக்கு தனி உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா உறுதி அளித்தார்.

அதைதொடர்ந்து ராயபுரம் பகுதியில் உள்ள தங்கச் சாலையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.4.7 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூங்கா அமைக்கும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, நகரமைப்புக்குழு தலைவர் இளைய அருணா, துணை ஆணையாளர்கள் சினேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்