அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: காய்கறி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காய்கறி விலையை கட்டுப் படுத்தவும், நடமாடும் அங்காடி மூலம் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Update: 2023-07-11 00:32 GMT

சென்னை,

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து உள்ளது.

குறிப்பாக தக்காளி விலை கிலோ 150 ரூபாயை தாண்டி விற்கிறது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த சில வாரங்களாக சில குறிப்பிட்ட வகை மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை நிலவரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். அதைத்தொடர்ந்து, கூட்டுறவுத்துறை சார்பாக தக்காளி விலையை கட்டுப்படுத்த சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

இது தொடர்பாக அரசின் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள், காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மளிகை பொருட்கள், அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், ரேஷன் கடைகளிலும் சந்தை விலையைவிட குறைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் மேற்கொள்ளலாம்.

நடமாடும் காய்கறி அங்காடி

அதேசமயம், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இதில் கூடுதல் கவனம் செலுத்தி, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண்துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போதும் தேவைப்படும் இடங்களில் மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

300 ரேஷன் கடைகள் மூலம்

அதைத்தொடர்ந்து இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களும் மாநிலம் முழுவதும் செயல்படும் பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் கூடுதலாக தக்காளி, சிறிய வெங்காயம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். வெளிச்சந்தை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு போன்றவை சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

300 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும். நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப்பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் செயல்படும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் தக்காளி, சிறிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு இருப்பு விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பதுக்கல் செய்வோர் மீது அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

பங்கேற்றோர்

கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சமயமூர்த்தி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ராஜாராமன்,

வேளாண்மை ஆணையர் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தா தேவி, குடிமைப்பொருள் வழங்கல் (குற்றப்புலனாய்வுத்துறை) காவல்துறை தலைவர் காமினி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்