முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தந்தை பெரியார் வித்திட்ட சுயமரியாதை கொள்கைகள், பேரறிஞர் அண்ணாவின் லட்சியப்பாதையில், முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் கொள்கை உணர்வோடு தமிழகத்தை வழிநடத்தும் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 1-ந் தேதி 70-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
ஆட்சிக்கு வந்து 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளை செய்து இந்தியாவின் தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் தலைசிறந்தவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்பதை பார்த்து நாம் வியந்து போகிறோம்.
நிர்வாக பணிகளில் சென்னை மாநகர மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல்-அமைச்சராக வளர்ந்து தற்போது முதல்-அமைச்சராக உயர்ந்து நிற்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா வருகிற மார்ச் 1-ந் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கட்சி தலைமைக்கழகம் சார்பில் கொண்டாடப்பட உள்ளது.
இதேபோன்று முதல்-அமைச்சர் 70-வது பிறந்தநாளை ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் நகரம், ஒன்றிய, பேரூர், ஊர்கிளை, உட்கிளைதோறும் இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஏழைகளுக்கு உணவளித்து, பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞரணி, உள்பட அனைத்து அணியினரும், தொ.மு.ச.வினரும் அவரவர் பகுதிகளில் செய்து சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.