மனவளர்ச்சி குன்றிய சிறுவனை வீடு தேடி சென்று நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மனவளர்ச்சி குன்றிய சிறுவன் இல்லத்துக்கு சென்று மருத்துவ உபகரணங்கள் வழங்கி உடல்நலம் விசாரித்தார்.

Update: 2022-07-08 23:04 GMT

திருவண்ணாமலை,

மூளை முடக்குவாதம், மன வளர்ச்சி குறைவு, மன இறுக்கம் போன்ற குறைப்பாடுகள் உள்ள 10 ஆயிரத்து 146 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் வீட்டு வழி கல்வி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கிராமத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுவன் சிவா என்கிற சிவானந்தம் (14) இல்லத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, அந்த சிறுவனுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி நலம் விசாரித்தார்.

அப்போது அந்த சிறுவனிடம், 'உன் பெயர் சிவாவா? என்று மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தலையை ஆட்டியபடி புன்னகையித்தான். பின்னர் வணக்கம் சொல்... என்று மு.க.ஸ்டாலின் கேட்க, அந்த சிறுவன் கையை எடுத்து வணங்கினான். உடனே சிறுவனின் கையை மு.க.ஸ்டாலின் வாஞ்சையுடன் பிடித்துக்கொண்டார்.

அக்கறையுடன் விசாரிப்பு

அந்த சிறுவனுக்கு அளிக்கப்படும் தசைப்பயிற்சி, சிறப்பு கல்வி பயிற்சி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆசிரியை விளக்கினார். ஆரம்பத்தில் படுத்த படுக்கையாக இருந்த சிறுவன், தற்போது எழுந்து அமரும் வகையில் தேறி இருக்கிறார் என்று கூறினார்., 'எல்லாம் புரிந்துக் கொள்கிறானா? டி.வி. பார்க்கிறானா?' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியையிடம் அக்கறையுடன் கேட்டறிந்தார்.

சிறுவனின் உடல்நிலை குறித்து அக்கறையோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்துக் கொண்டிருந்தபோது சிறுவனின் தங்கை செம்பில் தண்ணீர் எடுத்து வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். அந்த தண்ணீரை வாங்கி பருகிவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி கே.எஸ். மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் ஆர்.ஆனந்தகுமார், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார், திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாடு வாங்க வட்டியில்லா கடன்

இந்த ஆய்வு தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மனவளர்ச்சி குன்றிய சிறுவன் சிவானந்தத்தின் தந்தை ஏழுமலை ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் தமிழரசி விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அண்மையில் மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக ரூ.25 ஆயிரம் கறவை மாடு வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் இல்லம்தோறும் மேற்கொண்ட கள ஆய்வின் போது, ஒன்றரை வயதில் சிவானந்தத்திற்கு மூளைமுடக்குவாதம் மற்றும் அறிவுசார் குறைபாடு கண்டறியப்பட்டு, தொடர்ந்து இயன்முறை பயிற்சி மற்றும் ஆரம்பகல்வி வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் வாயிலாக இல்லத்திற்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் சிறப்புக்கல்வி வழங்கப்பட்டு, தற்போது 10-ம் வகுப்புக்கான கல்விப்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சிறுவனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதம்தோறும் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1,500 கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக உதவியாளருக்கான உதவித்தொகையும் ரூ.1,000 இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மூளை முடக்குவாத சிறப்பு சக்கரநாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குழந்தைகளை கையாளும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

உதவி உபகரணங்கள்

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ரூ.838.01 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தி வருகிறது. பயனாளிகள் விரும்பும் உபகரணங்களை தாமே தெரிவு செய்துகொள்ளும் திட்டத்தின்கீழ் 8 ஆயிரத்து 436 பயனாளிகளுக்கு ரூ.16.77 கோடி செலவில் உபகரணங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்