பிரதமர் மோடியை எதிர்ப்பதாக கூறிதமிழக விவசாயிகளின் உரிமைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுக்கிறார்

பிரதமர் மோடியை எதிர்ப்பதாக கூறி தமிழக விவசாயிகளின் உரிமைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுத்து நாடகமாடி வருகிறார் என பாதயாத்திரையின் போது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.;

Update:2023-08-16 02:28 IST

களியக்காவிளை:

பிரதமர் மோடியை எதிர்ப்பதாக கூறி தமிழக விவசாயிகளின் உரிமைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுத்து நாடகமாடி வருகிறார் என பாதயாத்திரையின் போது அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

தேசியக்கொடியை ஏந்தி பாதயாத்திரை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலையில் குமரி மாவட்டம் களியக்காவிளை பஸ்நிலையத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பாதயாத்திரையை தொடங்கினார்.

இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தேசியக் கொடியை ஏந்தியவாறு பங்கேற்றனர். அப்போது பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களை எழுப்பியபடி தொண்டர்கள் கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் நின்ற தொண்டர்களையும், மக்களையும் பார்த்து அண்ணாமலை கையசைத்தபடி சென்றார். படந்தாலுமூடு, திருத்துவபுரம் வழியாக குழித்துறை சந்திப்பை சென்றடைந்தார்.

அங்கு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான 7½ கி.மீ. தூரத்துக்கான பாதயாத்திரையை மதியம் நிறைவு செய்தார். பின்னர் அவர் திறந்த வாகனத்தில் நின்றபடி பேசுகையில் கூறியதாவது:-

மோடி பிரதமராக வேண்டும்

35-வது சட்டமன்ற தொகுதியாக குமரி மண்ணில் விளவங்கோட்டில் என் மண், என் மக்கள் யாத்திரை எழுச்சியாக வந்திருக்கிறது. மக்களுக்காக வாழ்ந்த கர்மவீரர் காமராஜர் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தி.மு.க. ஆட்சியை பார்க்கின்றோம்.

தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி, அவலங்களை எடுத்துச் சொல்லி எப்படிப்பட்ட மோசமான குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை சாமானிய மக்களுக்கு பட்டிதொட்டியெல்லாம் பறைசாற்றி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நம்மைக் காக்கக்கூடிய ஒரேயொரு கடவுளாக இருக்கக்கூடிய நரேந்திரமோடி 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் பிரதமராக வரவேண்டும் என்பதை சொல்வதற்காக இங்கு வந்திருக்கிறோம்.

மதத்தை விட்டு வெளியே வாருங்கள்

கன்னியாகுமரிக்கு வரும் போது சில விஷயங்களை மறக்க முடியாது. இந்திராகாந்தி கைது செய்யப்பட்ட போது குமரி மாவட்டம் வெள்ளிகோட்டில் ஒரு பஸ்சை கொளுத்தி 9 பேரை உயிரோடு எரித்ததைப்போல இன்று காங்கிரஸ் கட்சி நாடெங்கிலும் பிரிவினைவாத தீயை கொளுத்திக் கொண்டிருக்கிறது. சாதி, மதம் என்ற தீயை கொளுத்தி போடுகிறார்கள். மணிப்பூர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து, இங்கு சுவரொட்டிகளாக ஒட்டி வைத்திருக்கிறார்கள். மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். இந்த சம்பவத்துக்கு பா.ஜனதா தான் காரணம் என்று கிறிஸ்தவர்களிடம் தண்டோரா போட்டு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவை அமைதி பூங்காவாக பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார். எங்கும் குண்டுவெடிப்பு கிடையாது.

குமரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதைத்தவிர எந்த பிரச்சினையும் இல்லை. 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சித்திட்டங்களை குமரிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்தார்கள். அதில் 5 ஆண்டுகளில் 20ஆயிரம் கோடி ரூபாய் கூட செலவிடப்படவில்லை. மீதமுள்ள 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் உள்ளது. இல்லை என்று சொன்னால் இங்குள்ள எம்.பி. வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். அவர் காலை முதல் இரவு வரை மதம் என்பதை மட்டுமே பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி முதலில் மதத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

மு.க.ஸ்டாலின் காரணம்

தமிழகத்தில் மகனுக்கும், மருமகனுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார். உங்கள் மாவட்டத்துக்கு இந்தப்பக்கம் கேரளா. கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி முதல்-அமைச்சர் பினராயி விஜயனும் மகளுக்கும், மருமகனுக்கும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் தான் பினராயி விஜயனின் மகள் மாட்டியிருக்கிறார். அவர் சட்டவிரோதமாக ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 72 லட்சம் வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. 2 மாநிலத்திலும் ஆட்சி ஒரே மாதிரியாக நடக்கிறது. கேரளாவும் குமரியை வஞ்சிக்கிறது. 18 ஆண்டுகளாக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் விடவில்லை. 2 மாநில முதல்-அமைச்சர்களும் பிரதமர் நரேந்திரமோடியை எதிர்ப்பதாக கூறி நம் உரிமைகளை, விவசாயிகள் உரிமைகளை விட்டுக் கொடுத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தை கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக மாற்றி வைத்துள்ளது தி.மு.க. அரசு. தமிழகத்துக்கு ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய முதல் மாநிலமாக மாறியிருக்கிறோம். ஒரு குடும்பம் மீது 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. இதுதான் திராவிட மாடல் செய்த சாதனையா? தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வுக்காக நடந்த மரணத்துக்கு காரணம் தி.மு.க. மட்டும் தான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். வேறு யாரும் காரணம் இல்லை.

400 எம்.பி.க்கள்

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 283 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 303 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக 400-க்கு மேல் எம்.பி.க்கள் மக்கள் ஆசீர்வாதத்துடன் பா.ஜ.க.வுக்கு வரப்போகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழகம்- புதுச்சேரியில் இருந்து 40-க்கு 40 எம்.பி.க்கள் அந்த 400-ல் இருக்க வேண்டும் என்பது நமது ஆசை. பா.ஜனதாவுக்கு காஷ்மீரில் ஒரு எம்.பி. இருப்பது போன்று நாட்டின் கடைசி பகுதியான குமரியில் இருந்தும் ஒரு எம்.பி. வர வேண்டும். மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாதயாத்திரையின் போது சென்ற லாரியில் பிரதமர் மோடி கை அசைப்பது போன்று பிரமாண்ட உருவம் பொறித்த பொம்மை ஒன்று பொது மக்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சிங்காரி மேளமும் பாதயாத்திரையை கவர்ந்தது.

இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில நிர்வாகிகள் மீனாதேவ், உமாரதி ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் வெட்டுமணியில் இருந்து இரவிபுதூர்கடை வரை 6 கி.மீ. தூரம் அண்ணாமலை பாதயாத்திரையாக தொண்டர்கள் புடைசூழ நடந்து சென்று நிறைவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்