முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார்-எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.;
எடப்பாடி:
எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
சேலம் மாவட்டத்தில் தொடர் மழையால் எடப்பாடி சரபங்கா நதி கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பகுதியில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வெள்ள சேதங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் எடப்பாடி பஸ் நிலையம் அருகே சரபங்கா நதி கரையோர பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் முகாமில் தங்கி இருந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள், வேட்டி-சேலைகள்அடங்கிய நிவாரண தொகுப்பையும் வழங்கினார். மேலும் அந்த பகுதி மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி, விரைவில் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.
பேட்டி
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மேட்டூர் உபரி நீரை கொண்டு சரபங்கா வடிநிலப்பகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் வகையில் ரூ.562 கோடி மதிப்பீட்டில் பாசன திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு உரிய முறையில் செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள 10 ஏரிகள் கூட நிரம்பாத அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் அ.தி.மு.க. தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பால் உண்மை, தர்மம் வென்றுள்ளது. இந்த நியாயமான தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.
அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார்
அ.தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் புகழேந்தி உண்மையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட அல்ல. அவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு நோட்டோ வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றார்.
இதில் இருந்து அவரின் மக்கள் செல்வாக்கு அனைவருக்கும் நன்கு தெரியும். அவர் ஊடகத்தை பயன்படுத்தி அரசியல் செல்வாக்கு உள்ளவர் போல் காட்டி கொள்வதற்காக அ.தி.மு.க.வுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார். அதை ஒருபோதும் அ.தி.மு.க. பொருட்டாக கருதப்போவதில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஜாக்டோ, ஜியோ மாநாட்டில் எந்த ஒரு பலன் அளிக்கும் அறிவிப்பையும் வெளியிடாமல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார். இதை அவர்கள் உணர வேண்டும். தற்போதைய நிலையில் அரசு அலுவலர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
10 கோரிக்கைகள்
தமிழக முதல்-அமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நிறைவேற்றப்படாத 10 முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையே, அந்தந்த பகுதிகளில் செயல்படுத்த படாத நிலையே உள்ளது.
நானும் சேலம் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் திட்டங்கள் வேண்டி தமிழக முதல்-அமைச்சருக்கு தகவல் அளித்துள்ளோம். சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியே சரியாக வழங்கப்படாத நிலையில், அவர் எம்.எல்.ஏ.க்கள் தரும் 10 கோரிக்கைகளை எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 15 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு திட்டங்களும் செயல்படுத்தவில்லை. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பேட்டியின் போது, அ.தி.மு.க. நகர செயலாளர் ஏ.எம்.முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தசாமி, எடப்பாடி நகராட்சி முன்னாள் தலைவர் டி.கதிரேசன், ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ் மற்றும் மாதேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.