முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்கிறார்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது. இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காலை 8 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மதியம் 1 மணியளவில் கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானல் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முதல்-அமைச்சர் வருகையையொட்டி இன்று முதல் வருகிற மே 4-ந் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.