நாளை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்பெயினில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
சென்னை,
அரசுமுறை பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். பயணம் மேற்கொள்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தி.மு.க. அரசின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில் ஒன்றான உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7-ந் தேதி காலை சென்னை திரும்புகிறேன். ஸ்பெயின் நாட்டு கம்பெனிகளின் முதலீடு பற்றி பயணத்தை முடித்துவிட்டு வந்தபிறகு விளக்கமாக சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த பயணத்தின்போது ஸ்பெயினில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அவர் களை தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹபக் லாய்டு நிறுவன நிர்வாக இயக்குனர்களை கடந்த ஜனவரி 31-ந் தேதி சந்தித்து பேசினார். அதன் காரணமாக ரூ.2 ஆயிரத்து 500 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைக்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
மேலும், சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். அது தவிர மேட்ரிட் நகரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார். தமிழகத்தில் உகந்த சூழ்நிலை நிலவுவதால் அங்கு முதலீடு செய்ய வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) சென்னை திரும்புகிறார். 7-ந் தேதி காலை 8.30 மணி அளவில் விமான நிலையம் வந்தடையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்து, தமிழகத்தில் செய்யப்படவுள்ள முதலீடுகள் குறித்த தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.