செஸ் ஒலிம்பியாட்: 3-வது சுற்றிலும் இந்திய அணிகள் ஆதிக்கம்..!
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று நடந்த 3-வது சுற்றிலும் இந்திய அணிகள் ஆதிக்கம் செலுத்தியது.
சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் திருவிழாவில் அதிக புள்ளிகள் எடுக்கும் அணி சாம்பியன் மகுடத்தை சூடும். ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது. முதல் 2 சுற்றுகளில் அமர்க்களப்படுத்திய இந்திய அணிகள் நேற்று நடந்த 3-வது சுற்றிலும் முழுமையாக கோலோச்சியது.
இதில் ஓபன் பிரிவில் இந்தியா 1 அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் கிரீசை தோற்கடித்தது. ஹரிகிருஷ்ணா, அர்ஜூன் எரிகாசி வெற்றி பெற்ற நிலையில் விதித் குஜராத்தி, சசிகிரண் தங்களது ஆட்டங்களில் 'டிரா' கண்டனர்.
பிரமிப்பூட்டும் வகையில் ஆடிய இந்தியா 2 அணி 4-0 என்ற புள்ளி கணக்கில் சுவிட்சர்லாந்தை ஊதித்தள்ளியது. இந்திய அணியில் குகேஷ், சரின் நிஹில், சத்வானி ரானக் எதிராளிகளை எளிதில் வென்றனர். கருப்பு நிற காயுடன் ஆடிய மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்தா, சுவிட்சர்லாந்தின் பெலட்டியன் யானிக்கை தோற்கடிக்க 67-வது நகர்த்தல் வரை காத்து இருக்க வேண்டியதாகி விட்டது.
இந்தியா 3 அணி, ஐஸ்லாந்துடன் மோதியது. சூர்ய சேகர் கங்குலி, அபிமன்யு ஆகியோர் தங்களது ஆட்டத்தில் 'டிரா' செய்தனர். தமிழகத்தை சேர்ந்த சேதுராமன் 36-வது காய் நகர்த்தலில் ஸ்டீபன்சன் ஹான்சுக்கும், அபிஜீத் குப்தா 36-வது காய் நகர்த்தலில் ஹிஜர்டான்சனுக்கும் 'செக்' வைத்து அடக்கினர். முடிவில் இந்த ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
பெண்கள் பிரிவில் இந்தியா1 அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வைஷாலி, பாக்தி குல்கர்னி தங்களது ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தனர். தானியா சச்தேவ் (இந்தியா)- யாவ் லான் (இங்கிலாந்து) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இதே போல் நிறை மாத கர்ப்பிணியான இந்திய நட்சத்திர வீராங்கனை ஹரிகா துரோணவல்லி நடப்பு தொடரில் முதல்முறையாக நேற்று களம் கண்டார். ஹவுஸ்கா ஜோவன்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா 40-வது காய் நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
இந்தியா 2 அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேஷியாவை சாய்த்தது. வந்திகா, சவுமியா ஆகியோர் வெற்றியும், பத்மினி, மேரி ஆன் கோம்ஸ் ஆகியோர் டிராவும் கண்டனர்.
இந்தியா 3 அணி தங்களை எதிர்த்து மல்லுகட்டிய ஆஸ்திரியாவை 2½-1½ என்ற புள்ளி கணக்கில் வென்றது. இதில் தமிழக வீராங்கனை நந்திதாவை எதிர்த்து விளையாட இருந்த சியாரா உடல்நலக்குறைவால் விலகியதால் நந்திதா காய் நகர்த்தாமலே வெற்றி பெற்றார். இதே போல் பிரத்யுஷா போட்டா 59-வது நகர்த்தலில் எலிசபெத்தை தோற்கடித்தார். ஈஷா கரவடே-கேத்ரினா இடையிலான மோதல் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆனால், ஆஸ்திரியாவின் நிகோலா மேருபருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாஹிதி வர்ஷினி 46-வது காய் நகர்த்தலில் பணிந்தார். இந்த ஒலிம்பியாட்டில் தனிநபரில் இந்தியா சந்தித்த முதல் தோல்வி அது தான்.
4-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.