சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி கலெக்டர் கார்மேகம் ஆய்வு

சேலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடந்த செஸ் போட்டியை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update:2022-07-15 03:02 IST

சேலம், 

செஸ் போட்டி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. அரசு சார்பில் இந்த போட்டி குறித்து அனைத்து தரப்பினர் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே செஸ் போட்டி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலத்தில் நடந்த செஸ் போட்டியில் மாவட்டத்தில் இருந்து 1,769 பள்ளிகளை சேர்ந்த 39 ஆயிரத்து 890 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், வட்டார அளவில் வருகின்ற 20-ந் தேதியும், மாவட்ட அளவில் 25-ந் தேதியும் செஸ் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பள்ளி அளவில் பிரிவுகள் வாரியாக முதல் 2 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகள், வட்டார அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் பங்கு பெறலாம். தொடர்ந்து, வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பிரிவுகள் வாரியாக முதல் 3 இடங்களை பெறுபவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

போட்டியை பார்வையிட வாய்ப்பு

மாவட்ட அளவில் முதல் இடம் பிடிக்கும் 6 பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்படும். 2-ம் இடம் பிடிக்கும் 6 பேருக்கு தலா ரூ.800, 3-ம் இடம் பிடிக்கும் 6 பேருக்கு தலா ரூ.500 பரிசு வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

மேலும், மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டருடன் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் சிவரஞ்சன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்