நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான செஸ் போட்டி கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான செஸ்போட்டி நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

Update: 2022-07-19 15:58 GMT

நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான செஸ்போட்டி நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

செஸ் போட்டி

இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி, அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்குமான சதுரங்க போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நாமக்கல் மாவட்ட சதுரங்க சங்கத்தின் செயலாளர் ஞானசேகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள், நாமக்கல் மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவை இணைந்து செய்திருந்தன.

பள்ளி மாணவ, மாணவிகள்

இதற்கிடையே இன்று (புதன்கிழமை) ஒன்றிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி நடைபெற உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

நாமக்கல் ஒன்றியத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேந்தமங்கலம் ஒன்றியத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், எருமபட்டி ஒன்றியத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கொல்லிமலை ஒன்றியத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ராசிபுரம் ஒன்றியத்தில் ராசிபுரத்தில் உள்ள அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மோகனூர் ஒன்றியத்தில் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோடு ஒன்றியத்தில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பள்ளிபாளையம் ஒன்றியத்தில் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், எலச்சிபாளையம் ஒன்றியத்தில், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் மல்லசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பரமத்தி ஒன்றியத்தில் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கபிலர்மலை ஒன்றியத்தில் கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் போட்டி நடைபெற உள்ளது.

முதல் 3 இடங்கள்

ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டியில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாவட்ட போட்டியில் கலந்து கொள்வார்கள். வருகிற 25-ந் தேதி மாவட்ட அளவிலான போட்டி நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மாவட்ட அளவில் முதல் இடங்களை பெறக்கூடிய 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 8 பேர் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை அடுத்தமாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி பார்வையிடும் வாய்ப்பினை பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்